திருப்பூர் பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
திருப்பூர் பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு
திருப்பூர்
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு பிரசாதமாக ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் வழங்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா
திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவிலில் நடந்து வருகிறது. கடந்த 16-ந்தேதி தனுர் மாத பூஜைகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 23-ந்தேதி பகல் பத்து உற்சவம் ஆரம்பமாகியது. நேற்று மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோல திருவீதியுலா நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து கருடவாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து, நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். அனுமந்தராயர், மூலவரையும், தாயார்களையும் தரிசனம் செய்யும் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்பெருமா-ளை வழிபட உள்ளனர். இரவு 8 மணிக்கு இராபத்து உற்சவம் ஆரம்பம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சொர்க்கவாசல் திருநடை சாத்தப்படும்.
சொர்க்கவாசல் திறப்பு
வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) இரவு கூடாரை வெல்லும் உற்சவம், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு ஆழ்வார் மோட்ச உற்சவம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை (9-ந்தேதி திங்கட்கிழமை தவிர) தினசரி மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு திருநடை சாத்தப்படும். விழாவில் பிரசாதம் வழங்க ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது. திருப்பூர் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நம்பெருமாளை வணங்கிவிட்டு சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து செல்லும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வீதம் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல அலுவலர் சரவணபவன், இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் தக்கார் செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர். இதேபோல் கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.