தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்


தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்
x

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா(வயது 56). இவர் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் ஜெயச்சந்திர ராஜா, சிதம்பரம் மெய்காவல் தெருவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், திடீரென ஜெயச்சந்திர ராஜாவை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த ஜெயச்சந்திர ராஜா புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திர ராஜாவை கத்தியால் வெட்டியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

2-வது சம்பவம்

ஜெயச்சந்திர ராஜா கடந்த மாதம் 21-ந்தேதி சிதம்பரம் மானா சந்து பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை மர்மநபர்கள் 2 பேர் வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கினர். அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரை போலீசாா் கைது செய்யாத நிலையில், தற்போது அவர் மீது 2-வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று கடைகள் அடைப்பு

இதற்கிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை கடந்த 21-ந்தேதி இரவு மர்மநபர்கள் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பட்டப்பகலிலேயே அவரை வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை திட்டமிட்டே மர்மநபர்கள் மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றனர். எனவே தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதில் தலையிட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து நாளை (அதாவது இன்று வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story