பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை கட்டி பராமரிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு


பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை கட்டி பராமரிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
x

தமிழகத்தில் வருகிற 4 ஆண்டுகளில் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டி பராமரிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தர்மபுரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தர்மபுரி

தமிழகத்தில் வருகிற 4 ஆண்டுகளில் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டி பராமரிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தர்மபுரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கலெக்டர் சாந்தி வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, முதன்மைக்கல்வி அலுவலர்கள் குணசேகரன் (தர்மபுரி), மகேஸ்வரி (கிருஷ்ணகிரி), முருகன் (சேலம்), மகேஸ்வரி (நாமக்கல்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி இடைநிற்றலை தடுக்கும்

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மண்டல அளவில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் 4 மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநிற்றல் இருப்பதை அறிய முடிகிறது. இதற்கு தீர்வு காண தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக புதுமைப்பெண் நிதியுதவி திட்டம் மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தடுக்கும்.

ஆசிரியர் பற்றாக்குறை

மாணவர்களுக்கு இலவச திட்டங்கள் சரியாக சென்றடைந்துள்ளதா?, அதில் ஏதேனும் குறை உள்ளதா? என ஆய்வு நடத்தி வருகிறோம். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிதிலமடைந்த வகுப்பறை. கழிப்பறை உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அந்த இடங்களில் தேவைக்கேற்ப புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்பறையை போலவே கழிப்பறை கட்டிடங்களும் முக்கியம்.

அரசு பள்ளிகளில் போதிய அளவில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கழிப்பறை கட்டிடங்கள் இல்லாத பள்ளிகளில் தனியார் சமூக பொறுப்பு நிதி மூலம் கட்டி பராமரிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வருகிற 4 ஆண்டுகளில் பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டி பராமரிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். இதற்காக நடப்பு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் ஆய்வு

நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்களும் அதிக அளவில் எழுதி உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக முதல்-அமைச்சர் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, சப்தகிரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வைரமுத்துவுடன் பேச்சு

இதைத்தொடர்ந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை தமிழ்ச்செல்வி கவிஞர் வைரமுத்து கவிதை தொகுப்பு குறித்து பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அந்த வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக கவிஞர் வைரமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அந்த ஆசிரியையை கவிஞர் வைரமுத்துவிடம் பேச வைத்தார். அப்போது உங்கள் தமிழ் தொண்டு தொடர வேண்டும் என்று ஆசிரியைக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்தார்.

விளையாட்டு முக்கியம்

தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த மாணவிகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, படிப்பை போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து சந்தைப்பேட்டை நகராட்சி பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி, பொருளாளர் நாட்டான் மாது, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரசாள், மணிவண்ணன் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story