பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்
7 லட்சத்து 505 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன் வினியோகம் தொடங்கியது. இந்த பணியில் ஈடுபடும் 1,183 ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
7 லட்சத்து 505 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன் வினியோகம் தொடங்கியது. இந்த பணியில் ஈடுபடும் 1,183 ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பை பெறக்கூடிய குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்குதல், தொகுப்புகள் வினியோகம் செய்யப்பட வேண்டிய முறை குறித்து தமிழகஅரசு அறிவித்துள்ளது.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம்,திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய தாலுகாக்களில் உள்ள அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் அந்தந்த பகுதி ரேஷன் கடை ஊழியர்களே ஈடுபட்டனர்.
வீடு, வீடாக சென்று வினியோகம்
ஒவ்வொரு வீடாக சென்று அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைதாரர்களிடம் டோக்கன்களை ஊழியர்கள் வழங்கினர். அந்த டோக்கன்களில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. டோக்கன் வினியோகம் செய்யும் பணி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.இது குறித்து தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 1,218 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 291 பகுதிநேர கடைகளும் அடங்கும். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாளொன்றுக்கு 200 முதல் 250 டோக்கன் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கும் பணியில் 1,183 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
9-ந் தேதி
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 813 குடும்ப அட்டைகள் உள்ளன. சர்க்கரை வாங்குபவர்கள், எந்த பொருட்களும் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை தவிர மீதமுள்ள 7 லட்சத்து 505 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தவுடன் எல்லா ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வேண்டுமானாலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.