தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது...!


தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது...!
x
தினத்தந்தி 1 Sept 2023 8:53 AM IST (Updated: 1 Sept 2023 10:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் 28 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பாக, மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2 ஆயிரத்து 505-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8 ஆயிரத்து 770-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கக்கட்டணம் உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


Next Story