கடலூர்-விருத்தாசலம் சாலையில் உள்ள பொன்னாலகரம் சுங்கச்சாவடி 1-ந்தேதி முதல் திறக்கப்படும் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கடலூர்-விருத்தாசலம் சாலையில் உள்ள பொன்னாலகரம் சுங்கச்சாவடி வருகிற 1-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விருத்தாசலம்,
கடலூர்-விருத்தாசலம் சாலையில் நெய்வேலி அருகே உள்ள பொன்னாலகரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.
இந்த சுங்கச்சாவடியை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருந்த நிலையில், இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அந்த பகுதி விவசாயிகள் என்று பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
சமாதான கூட்டம்
இது தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டங்கள் பல்வேறு கட்டமாக நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கோட்டாட்சியர் ராம்குமார் தலைமை தாங்கினார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், விருத்தாசலம் தாசில்தார் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய நெடுஞ்சாலை சேலம் திட்ட இயக்குனர் குலோத்துங்கன், விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி, விருத்தாசலம் உதவி கோட்ட பொறியாளர் கவிதா மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.
கட்டணத்தில் சலுகைகள்
கூட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடியை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, மேலும் டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்களுக்கு இலவச அனுமதி, உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு சுங்க வரி சலுகை, 20 கிலோமீட்டர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட சொந்த வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.315 மட்டும், 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு சுங்ககட்டணத்தில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
புறக்கணிப்பு
இருப்பினும் இந்த கூட்டத்தில் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என்று யாரும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர். மாறாக நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மட்டும் பங்கேற்றனர்.