தமிழ்நாட்டிலேயே மிகப்பெரியதாக விளங்கும் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுமா? விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு
ராயக்கோட்டை:
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரியதாக விளங்கும் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தக்காளி மார்க்கெட்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கூட்டு ரோட்டில் தக்காளி மார்க்கெட் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டாக இது உள்ளது. தக்காளி மட்டுமல்லாமல் காய்கறிகளும் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த மார்க்கெட்டிற்கு ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.
50 முதல் 100 டன்
அதேபோல இந்த தக்காளிகளையும், காய்கறிகளையும் மொத்தமாக வாங்கி செல்வதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் வியாபாரிகள் இங்கு வருகிறார்கள்.
இதனால் ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் அமைந்துள்ள பகுதி அதிகாலை முதலே களைகட்டி காணப்படும். ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக நிரம்பி வழிய கூடிய பகுதியாக அந்த இடம் உள்ளது. மழை இல்லாத காலங்களில் நாள்தோறும் 50 முதல் 100 டன்கள் வரையில் தக்காளியும், காய்கறிகளும் இங்கு வரும். இதை கொண்டு செல்வதற்காக நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் இங்கு வந்து செல்லும்
குளிர்பதன கிடங்கு
தற்போது மழையின் காரணமாக தக்காளி மற்றும் காய்கறிகளின் சாகுபடி குறைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 டன் வரையில் காய்கறிகள் வருகிறது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து காய்கறிகளை மொத்தமாக ஏற்றி செல்வதற்காக 30 முதல் 40 வாகனங்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்ல கூடிய தக்காளி மார்க்கெட்டிற்கு பல்வேறு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக காய்கறிகளை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என்பது அந்த பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதே போல தக்காளி மார்க்கெட் உள்ள பகுதியில் சில பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. பல பஸ்கள் நிற்பதில்லை. எனவே அனைத்து பஸ்களும் நின்று செல்ல வசதியாக அந்த பகுதியில் சிறிய அளவில் ஒரு பஸ் நிலையம் கட்டி தர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சுகாதார வளாகங்கள்
மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியில் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு சுகாதார வளாகங்கள் அந்த பகுதியில் இல்லை. எனவே சுகாதார வளாக வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், மேலும் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் வேண்டும்
ஆர்.என்.சீனிவாசன், ராயக்கோட்டை:-
ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் தங்களின் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய கூடி மொத்த இடமாக தக்காளி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக குளிர்பதன கிடங்கு அவசியம் தேவைப்படுகிறது. இது நீண்ட கால கோரிக்கை அதை நிறைவேற்றி தர வேண்டும். அதே போல இங்கு ஒரு பஸ் நிலையம் அமைத்து தந்தால் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயனாக இருக்கும். எனவே அரசு அதை பரிசீலிக்க வேண்டு்ம்.
புருஷப்பன், ராயக்கோட்டை:-
ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்களின் வியாபார தலமாக தக்காளி மார்க்கெட் விளங்குகிறது. பல்வேறு மாவட்ட மற்றும் அண்டை மாநில வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியாக இந்த மார்க்கெட் உள்ளது. இந்த பகுதிக்கு வரும் விவசாயிகள் வியாபாரிகள் நலன் கருதி சுகாதார வளாகங்கள், குளியல் அறைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் காய்கறிகளை மார்க்கெட் அருகிலேயே இறக்கி வைக்க தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.