தக்காளி கிலோ 100-க்கு விற்பனை
கும்பகோணம் பகுதியில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் தக்காளி கிலோ 100-க்கு விற்பனை செய்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்து குறைவு
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தக்காளி வரத்து குறைந்துள்ளதை தொடர்ந்து தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரணமாக கிலோ ரூ. 20 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை விற்பனை செய்யப்படும் தக்காளி. தற்போது 2 மடங்காக விலை உயர்ந்து மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கும், சில்லறை விலையில் ரூ.100-க்கும் விற்பனையாகிறது. இந்த கடும் விலை உயர்வு இல்லத்தரசிகள், ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
விலை கடும் உயர்வு
இதுகுறித்து இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், நாள்தோறும் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் தக்காளியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சட்னி, சாம்பார், ரசம், சூப் உள்ளிட்ட பிரதான உணவு வகைகளில் தக்காளியின் பங்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உணவு தயாரிப்பில் தக்காளியை அதிகம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வெங்காயத்தின் விலை அதிகரித்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதே போல் இந்த முறை தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது எங்களைப் போன்ற இல்லத்தரசிகளுக்கும், ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்..
குறைந்த அளவு சாகுபடி
இதுகுறித்து தக்காளி மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் பொதுவாகவே தக்காளி சாகுபடி குறைவு. இந்த முறை பல இடங்களில் பருத்தி உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால் மிகக் குறைந்த அளவே தக்காளி, தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்தும் தற்போது குறைந்துள்ளது.
தக்காளியை பதுக்கி வைப்பதால் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் எண்ணுகின்றனர். அவ்வாறு தக்காளியை பதுக்கி வைத்தால் ஓரிரு நாட்களில் தக்காளி பழுத்து அழுகி வீணாகிவிடும். எனவே உற்பத்தி மற்றும் வரத்து குறைவு காரணமாகவே தக்காளி விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்தால் தக்காளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்றார்.