தக்காளி விலை மீண்டும் ஏறுமுகம்: பீன்ஸ் விலையும் சதம் அடித்தது
தக்காளி விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதுதவிர பீன்ஸ் விலையும் சதம் அடித்தது.
சென்னை,
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த வாரம் இறுதியில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதற்கு முந்தைய நாட்களில் ஒரு கிலோ ரூ.140 வரை சென்றது. தொடர்ந்து விலை அதிகரித்து மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.200 வரை செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் விலை சற்று குறையத் தொடங்கி, ரூ.120 வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக மீண்டும் தக்காளி விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.95 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் அதன் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை ஆனது.
பீன்ஸ் விலை சதம்
அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்து இன்னும் போதிய அளவுக்கு வரத்து இல்லாததால், தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில், ஏற்ற, இறக்கத்துடன் அதன் விலை இருக்கிறது. கடந்த 2 நாட்களாக விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை கோயம்பேடு மார்க்கெட்டிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.180 முதல் ரூ.220 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி, சின்ன வெங்காயம், பச்சைப்பட்டாணி, இஞ்சி, குடை மிளகாய் ஆகியவற்றின் விலை ஏற்கனவே ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகும் நிலையில், அந்த வரிசையில் தற்போது பீன்ஸ் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து, நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-க்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆனது. சில்லரை கடைகளில் இதைவிட சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டது.
மஞ்சள் விலையும் அதிகரித்தது
ஒரு பக்கம் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் மளிகை பொருட்களின் விலையும் சத்தம் இல்லாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. துவரம் பருப்பு, பூண்டு உள்பட சில முக்கிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது விரல் மஞ்சள் விலையும் உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ மஞ்சள் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் அதிகரித்து, ரூ.120-க்கு சென்றது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை ஆனது. ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து வரத்து குறைவால், மஞ்சள் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.