விண்ணைத் தொட்ட தக்காளி விலை; கிலோ ரூ.130-க்கு விற்பனை
அன்னவாசல் பகுதியில் விண்ணைத்தொடும் அளவிற்கு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகள் விலையும் உயர்ந்ததால் பொமக்கள் வேதனையடைந்துள்ளனர்.
தக்காளி கிலோ ரூ.130
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்கப்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் பலரும் தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் கொட்டி அழிக்கும் நிலை உருவானது. 3 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு சில்லறை விலையில் விற்கப்பட்டது. ஆனால் கடந்த மாதத்தின் 3-வது வாரத்தில் பெய்த மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக தக்காளி விலை மெல்ல உயரத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. ஆரம்பத்தில் கிலோ ரூ.30, ரூ.40-க்கு விற்கப்பட்ட தக்காளி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் தக்காளி விலை விண்ணைத்தொடும் அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையாகிறது.
மக்கள் தவிப்பு
மேலும் வாரச்சந்தை கடையில் தக்காளிகளின் வரத்து குறைவாகவே இருந்தது. வாரச்சந்தையில் கிலோ ரூ.130-க்கு விற்கப்படும் நிலையில் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ தாண்டி விற்கும் நிலை உள்ளது. திடீர் மழை, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்கிற நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
காய்கறிகள் விலையும் உயர்வு
இதுமட்டுமின்றி நேற்று முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தையில் பீன்ஸ் கிலோ ரூ.140, கேரட் கிலோ ரூ.120, அவரைக்காய் கிலோ ரூ.120, இஞ்சி கிலோ ரூ.300, சின்னவெங்காயம் கிலோ ரூ.100, பச்சைமிளகாய் கிலோ ரூ.120, வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது. இதனால் வாரச்சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.