தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
வரத்து அதிகரித்துள்ளதால் நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.
நாகர்கோவில்,
வரத்து அதிகரித்துள்ளதால் நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.
மக்கள் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த மே, ஜூன் ஆகிய மாதங்களில் சில காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி முன்பு ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்பனையான நிலையில், பல மடங்கு விலை உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் ஜூலை மாதத்தில் தக்காளி வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் இஞ்சியின் விலையும் கிலோ ரூ.300 வரை விற்பனையானது.
அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை தினமும் அதிகரித்து வந்ததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இல்லத்தரசிகள் விலைவாசி உயர்வால் அவதியடைந்தனர்.
காய்கறி விலை குறைவு
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காய்கறிகளின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி நேற்று நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் மொத்த விலைக்கு ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாம்பார் மிளகாயை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
வழக்கமாக மார்க்கெட்டில் சாம்பார் மிளகாய் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும். கடந்த 5 நாட்களாக அதன் விலை 3 மடங்கு அதிகரித்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கோவில் மார்ககெட்டுகளில் மொத்த விலைக்கு விற்பனையான காய்கறிகளின் நேற்றைய விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
உருளைகிழங்கு ரூ.30, பல்லாரி ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.50, தடியங்காய் ரூ.25, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரை, வெள்ளரிக்காய் ரூ.10, பீட்ரூட் ரூ.30, மிளகாய் ரூ.50 முதல் ரூ.60 வரை, சேனைக்கிழங்கு ரூ.60, நாட்டு கத்தரிக்காய் ரூ.50, வாி கத்தரிக்காய் ரூ.35, வழுதலங்காய் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
விளைச்சல் அதிகரிப்பு
காய்கறி விலை குறைந்தது தொடர்பாக அப்டா மொத்த காய்கறிக்கடை வியாபாரி சுயம்பு கூறியதாவது:-
கடந்த 2 மாதங்களாக தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளின் விளைச்சல் குறைவாக இருந்தது. இதனால் மார்க்கெட்டுக்கு அவற்றின் வரத்து மிகவும் குறைந்ததால் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது.
தற்போது இயல்புநிலை திரும்பியதால் வழக்கமாக விற்பனை செய்யப்படும் விலைக்கு தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் வந்துள்ளது. இந்த விலை குறைவுக்கு காரணம் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓணம் பண்டிகையையொட்டி விவசாயிகள் அதிகளவில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்தனர். வரத்து அதிகரித்து விலை குறைவு சாத்தியமானது. ஆனால், சாம்பார் மிளகாய் விளைச்சல் குறைவாக உள்ளதன் காரணமாக விலை உயர்ந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.