பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மளிகைப்பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தக்காளியின் விலை கடந்த 3 வாரங்களாக ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தக்காளி என்பது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு தக்காளியை இலவசமாக வழங்கினர். பஸ் நிலைய பயணிகள், பொதுமக்கள் என நபர் ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி என 120 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கினர். இதையறிந்ததும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கிச்சென்றனர். கட்டுக்குள் வராத தக்காளி விலையை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.