விலை இல்லாததால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி


விலை இல்லாததால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி
x
திருப்பூர்


உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தொடர் மழையால் தக்காளி சாகுபடியில் பயிர்கள் சேதமடைந்து இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், விலை இல்லாததால் வீதியில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியூர் வியாபாரிகள்

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், கத்தரி, பீட்ரூட், வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இங்கு விளையும் தக்காளி உடுமலை சந்தைக்கு கொண்டு வரப்பட்டு கமிஷன் மண்டிகள் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளிலிருந்து வியாபாரிகள் உடுமலை வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுதவிர கேரள மாநில வியாபாரிகளும் அதிக அளவில் உடுமலை பகுதியிலிருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனாலும் தக்காளி வரத்து அதிகரிக்கும் போதும், குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகள் வரும் போதும் விலை சரிவு என்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே நீடிக்கிறது.தற்போது மழையால் தக்காளி செடிகள் மற்றும் பழங்கள் சேதமடைந்துள்ள நிலையில் கடும் மகசூல் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். ஆனாலும் விலை உயராத நிலையில் மகசூல் இழப்பு, விலையின்மை என்று இருபக்கத் தாக்குதலால் விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி சாகுபடியில் தற்போது உயர் விளைச்சல் ரகங்கள் வந்துள்ளது. இதனால் அதிக மகசூல் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. அதேநேரத்தில் மழைக்காலங்களில் செடிகள் மற்றும் பழங்கள் அதிக அளவில் சேதமடைகிறது. மழையிலிருந்து செடிகள், காய்களை பாதுகாக்கும் வகையில் கொடி அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் ஆகிய வழிகளை ஒருசில விவசாயிகள் பின்பற்றுகிறார்கள். இதனால் சேதம் குறைவாக இருப்பதுடன் பழங்கள் தெளிவாக இருப்பதால் சந்தையில் அவற்றுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு கூடுதல் செலவு பிடிப்பதால் அனைத்து விவசாயிகளும் அதுபோன்ற கட்டமைப்புகளை உருவாக்க முடிவதில்லை.

தற்போது இந்த பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான தக்காளி செடிகள் அழுகி சேதமடைந்துள்ளன. பழங்களில் மழையடி படும்போது அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அவற்றை சாலையோரம் வீசி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது சுமார் 14 கிலோ எடை கொண்ட தக்காளி ரூ.70 முதல் ரூ.140 வரை விற்பனையாகிறது. உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வேதனையளிக்கிறது.

மழைக்காலத்தில் விளையும் தக்காளியை ஒரு நாள் கூட இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத அளவுக்கு அழுகி வீணாகும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான வெளியூர் வியாபாரிகள் தக்காளியை குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் உடுமலை வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமலேயே உள்ளது. வாகனங்களை நிறுத்துவது முதல் இயற்கை உபாதையை கழிப்பது வரை அத்தனையும் பிரச்சினையாகவே உள்ளது.இதுவும் வெளியூர் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகும். இதேநிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி மாற்றுத் தொழில் தேடிச் செல்லும் நிலை ஏற்படும்.எனவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கான வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story