பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்


பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்
x

பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களை மாணவிகள் பிடித்தனர்.

பெரம்பலூர்

தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளே தமிழ்நாடு நாள் விழாவாக இனி கொண்டாடப்படும் என தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த போட்டிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். "தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், "தமிழ்த் திரை உலகத்தை புரட்டி போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்" என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெற்றது. கட்டுரை போட்டியில் 102 பேரும், பேச்சு போட்டியில் 92 பேரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கட்டுரை போட்டியில் முதல் இடத்தை பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி கீர்த்தனா ஸ்ரீயும், 2-ம் இடத்தை அரும்பாவூர் அரசு பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி நசினாவும், 3-ம் இடத்தை பெரம்பலூர் ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி அட்சயாவும் பிடித்தனர். பேச்சு போட்டியில் முதல் இடத்தை பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி ஹரிபிரியாவும், 2-ம் இடத்தை வேப்பந்தட்டை அரசு பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி பார்கவியும், 3-ம் இடத்தை கவுல்பாளையம் அரசு பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி அஞ்சலியும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது. மேலும் கட்டுரை, பேச்சு போட்டிகளில் முதல் இடத்தை பிடித்த மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story