சூறாவளியுடன் ெபய்த மழையால் மரங்கள் சாய்ந்தன-சுவர் விழுந்து கார் நொறுங்கியது
வந்தவாசி பகுதியில் சூறாவளியுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன. மின்ஒயர்கள் உரசி தீப்பிடித்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
வந்தவாசி,
வந்தவாசி பகுதியில் சூறாவளியுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்தன. மின்ஒயர்கள் உரசி தீப்பிடித்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
பலத்தமழை
வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. அப்போது சூறாவளி காற்றும் சுழன்று சுழன்று வீசியது.
காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கோட்டைக்குள தெருவில் உள்ள காய்கறி வியாபாரி நிறுத்தியிருந்த கார் மீது மரம் மற்றும் சுற்றுச்சுவர் விழுந்ததில் கார் நொறுங்கியது.
தீப்பொறி
அப்போது திடீரென மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அப்புறப்படுத்தி காரை மீட்டனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள பழமையான மரம் ஒன்று சாய்ந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தி சரிசெய்தனர்
இதேபோல் வந்தவாசியை சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சத்தியா நகர், மும்முனி, பாதிரி, வெண்குன்றம், சென்னாவரம், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.