'நம்ம ஊரு சூப்பரு' பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டு மொத்த தூய்மை பணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நாளை முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு பிரசார இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணி நாளை முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை நடக்கிறது.
ஒட்டு மொத்த தூய்மை பணி
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூலநலம், வனம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும்
இதர துறைகள் இணைந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி வரை "நம்ம ஊரு சூப்பரு" என்ற பிரசார இயக்கம் சுகாதாரம், தண்ணீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றை வலியுறுத்தி ஒட்டு மொத்த தூய்மை பணிகள் அனைத்து ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
"நம்ம ஊரு சூப்பரு" பிரசசார இயக்கத்தின் மூலம் நாளை முதல் 15-ந் தேதி வரை கழிப்பறைகளை மறு சீரமைப்பு இலக்கை அடைதல், நாளை முதல் 13-ந் தேதி வரை பொது நிறுவனங்கள், இடங்களை பெருமளவில் சுத்தம் செய்தல், 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சுகாதாரம் தொடர்புடைய அனைத்து பணியாளர்களுக்கும் சுகாதார நல முகாம் ஏற்பாடு செய்தல் ஆகியவை நடக்கிறது.
விழிப்புணர்வு
8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்களை ஊக்குவித்தல், 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீடுகள், நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
29-ந் தேதி முதல் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்தல் மற்றும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல், ஜூன் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
இந்த "நம்ம ஊரு சூப்பரு" பிரசார நிகழ்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர்
தங்கள் சார்ந்த ஊரகப் பகுதிகளில் நடைபெறும் பிரசார இயக்கத்தில் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மைப்பணிகளில் பங்கேற்று நமது கிராமப்புறங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்ற சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.