தூங்கா நகரமான மதுரையில் குற்றச்சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை- புதிய போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பேட்டி


தூங்கா நகரமான மதுரையில் குற்றச்சம்பவங்களை முழுமையாக   குறைக்க நடவடிக்கை- புதிய போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பேட்டி
x

தூங்கா நகரமான மதுரையில் குற்றச்சம்பவங்கைள முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கூறினார்.

மதுரை


தூங்கா நகரமான மதுரையில் குற்றச்சம்பவங்கைள முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கூறினார்.

பொறுப்பேற்பு

மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை கமிஷனர் அலுவகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நரேந்திரன் நாயர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்த அவர் 2005-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அவர் 2009-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை கீழ்பாக்கம், மயிலாப்பூரில் துணை கமிஷனராகவும், தமிழக கவர்னரின் தனி பாதுகாப்பு அதிகாரியாகவும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐ.பி.பிரிவு அதிகாரியாக பணியாற்றினார்.

2019-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற அவர் சென்னை தலைமையிடம், கோவை சரகம், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை போலீஸ் கமிஷனராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவிழாவில் அச்சமின்றி பங்கேற்கலாம்

போலீஸ் கமிஷனராக பதவி ஏற்ற பின்னர் நரேந்திரன் நாயர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சித்திரைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் எவ்வித அச்சம், இடையூறு இன்றி பங்கேற்க நடவடிக்கை எடுப்போம். தூங்கா நகரமான மதுரை கலாசாரம் மிகுந்த நகரம். சட்டம், ஒழுங்கு, ரவுடிசம், குற்றச் சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே தென் சென்னையில் இணை கமிஷனராக பணிபுரிந்து இருக்கிறேன். அதன் பரப்பளவு கொண்ட மதுரையிலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இருப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் துணை கமிஷனர்கள் ஆறுமுகசாமி, வனிதா, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் வேல்முருகன் உடனிருந்தனர்.


Next Story