தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20¼ லட்சம் பேர்


தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20¼ லட்சம் பேர்
x

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20¼ லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாகும்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20¼ லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாகும்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்று கொண்டனர். பின்னர் அவர் கூறியதாவது:-தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சை மாவட்டத்தில் 9 லட்சத்து 88 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 42 ஆயிரத்து 392 பெண் வாக்காளர்களும், இதர பாலினத்தவர்கள் 155 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 31 ஆயிரத்து 384 வாக்காளர்கள் உள்ளனர்.

பெயர்கள் நீக்கம்

கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 10 ஆயிரத்து 380 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 49 ஆயிரத்து 394 பேரின் பெயர்கள் விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.இன்று (அதாவது நேற்று) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்தமாதம் (டிசம்பர்) 26-ந் தேதி வரை வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிவங்கள்

1.1.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 1.1.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண்: 6-யை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆணை நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம்: 6 (பி) -ல் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் விவரங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இறப்பு, நிரந்தரமான குடி பெயர்வு, இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்ய படிவம்: 7-யை பூர்த்தி செய்து வழங்கலாம். அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ளவும், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் செய்யவும், பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்யவும் படிவம்: 8-யை பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேற்பார்வையாளர்

தஞ்சை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை அரசு தனி செயலாளர் ஆபிரகாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை வருகிற 9-ந் தேதி முதல் ஜனவரி 5-ந் தேதி வரை 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் முரசொலி, அ.தி.மு.க. மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சண்முகபிரபு, ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story