டேங்கர் லாரி மீது சுற்றுலா பஸ் மோதல்; கிளீனர் பலி


டேங்கர் லாரி மீது சுற்றுலா பஸ் மோதல்; கிளீனர் பலி
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே டேங்கர் லாரி மீது சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். லாரியில் இருந்து கொட்டிய திராவகத்தில் இருந்து உருவான புகையால் 10 பேருக்கு மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கடலூர்

ராமநத்தம்,

புதுச்சேரியில் இருந்து

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று ஹைட்ரோ குளோரிக் திராவகத்தை ஏற்றிக்கொண்டு திருச்சியில் உள்ள எச்.சி.எல். கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தது. சிவகங்கை மாவட்டம் கடமை ஏந்தல் பகுதியை சேர்ந்த அருளானந்தம் மகன் அரோக்கியசாமி(வயது 50) என்பவர் லாரியை ஓட்டினார். ஆந்திரா மாநிலத்தில் இருந்து 40 பயணிகளுடன் சுற்றுலா பஸ் திருச்சி ஸ்ரீரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது. விசாகப்பட்டினம் நரசிங்கப்பள்ளி பகுதியை சோ்ந்த சண்ணாசி மகன் கணேஷ்(28) என்பவர் பஸ்சை ஓட்டினார். சிக்காகுளம் மாவட்டம் சந்தா பொம்மாளி அருகே உள்ள மரிபாடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்வரராவ் மகன் அனில்ரெட்டி (17) கிளீனராக இருந்தார்.

லாரி-பஸ் மோதல்

நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த கல்லூருக்கும் ஆவட்டிக்கும் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திராவகம் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் பின்புறம் சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பஸ் கிளீனர் அனில்ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தாத்தையா மனைவி சாவித்திரி(46), பத்மாவதி(52), கிருஷ்ணராவ்(63), காசியம்மாள்(50), சுஜாதா (50), பூஜாராவ் (38), ஏர்ரம்மா (80), கடிலம்மா(45), ராபம்மா, வெங்கட்ராவ்(60), சாவித்திரி(50) உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

புகை மூட்டம்

விபத்தில் லாரியின் டேங்க் சேதம் அடைந்ததால் அதில் இருந்த திராவகம் கீழே கொட்டி சாலையில் ஆறுபோல ஓடியது. அதில் இருந்து புகை உருவானதால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதில் சுற்றுலா பஸ்சில் இருந்த 10 பேருக்கு மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் திராவகத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து புகை மூட்டைத்தை கலைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

முன்னதாக இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் சுற்றுலா பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story