கடுங்குளிருக்கு சுற்றுலா பயணி சாவு
ஊட்டியில் நிலவும் கடுங்குளிர் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெண் சுற்றுலா பயணி இறந்தார்.
ஊட்டி,
ஊட்டியில் நிலவும் கடுங்குளிர் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெண் சுற்றுலா பயணி இறந்தார்.
கடுங்குளிர் நிலவுகிறது
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் தொடர்ந்து பெய்கிறது. கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் கடுங்குளிர் நிலவுகிறது. கடுங்குளிரை போக்க ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படியும் செல்கின்றனர். மேலும் தொழிலாளர்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இந்திரா காந்தி பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 45) என்பவர், தனது மகன் செந்தில்குமார், குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு எட்டின்ஸ் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இரவில் கடுங்குளிர் நிலவியது.
பெண் சாவு
இந்தநிலையில் விஜயலட்சுமிக்கு கடுங்குளிர் காரணமாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவரை குடும்பத்தினர் வாகனம் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவர் கடுங்குளிர் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் பெண் இறந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.