சுற்றுலா ரெயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: ஐ.ஆர்.சி.டி.சி. பொதுமேலாளர் பேட்டி
இந்திய ரெயில்வேயின் சுற்றுலா ரெயில் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. பொதுமேலாளர் கே.ரவிகுமார் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் நேற்று இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (சுற்றுலா பிரிவு) பொதுமேலாளர் கே.ரவிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறோம். தற்போது, பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறோம். பாரத் கவுரவ் சுற்றுலா திட்டத்தின் கீழ், இதுவரை 2 சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தற்போது, 3-வது சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, ஜூலை 1-ந்தேதி 'ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி யாத்திரை' என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத், ஆக்ரா, மதுரா, அமிர்தசரஸ், டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். 14 பெட்டிகள் கொண்ட இந்த சுற்றுலா ரெயிலில் 750 பேர் வரையில் பயணம் செய்யலாம். 12 நாட்கள் பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.22 ஆயிரத்து 350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரவேற்பு
இதுகுறித்த, மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140682 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்ற சுற்றுலா அமைப்புகளை விட எங்களுடையது மிகவும் சிறப்பானது. இந்திய ரெயில்வே சுற்றுலா ரெயில் திட்டங்களை ஊக்கப்படுத்துகிறது. பயணிகளிடமிருந்து எங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா ரெயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கோடைகாலத்தில் 2 ரெயில் திட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தோம். தற்போது, இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிவு செய்து இருக்கிறோம். கல்வி சுற்றுலாவுக்காக பள்ளி, கல்லூரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாரத் கவுரவ் திட்டத்தில், சுற்றுலா ரெயில் இயக்கத்தில் தனியாருடன் போட்டியிடும் சூழல் தான் இருக்கிறது. ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பயணிகளின் எண்ணிக்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. வரும் மாதங்களில் வாரணாசி, அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.