சுற்றுலா வேன் கவிழ்ந்து மாணவன் உடல் நசுங்கி சாவு


சுற்றுலா வேன் கவிழ்ந்து மாணவன் உடல் நசுங்கி சாவு
x

கோபி அருகே பள்ளிக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் மாணவன் உடல் நசுங்கி பலியானான்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே பள்ளிக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் மாணவன் உடல் நசுங்கி பலியானான்.

8-ம் வகுப்பு மாணவன்

கோபி அருகே உள்ள காசிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் முருகேசன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுடைய மகன் கவினேஷ் (வயது 14), கோபியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கவினேஷ் வழக்கமாக பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவதாக தெரிகிறது. அதன்படி வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக காந்திநகர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அவரின் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரும் பஸ் ஏற நின்று கொண்டு இருந்தார்.

உடல் நசுங்கியது

இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூைர சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள். சுற்றுலா முடிந்தபின்னர் நேற்று காலை மீண்டும் ஆத்தூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.

கோபி காசிபாளையம் காந்திநகர் பிரிவு அருகே வேன் வந்தபோது எதிரே ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது.

அதற்கு வழிவிடுவதற்காக வேனை டிரைவர் திருப்பியபோது எதிர்பாராத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த கவினேஷ் மற்றும் குமாரசாமி மீது மோதி கவிழ்ந்தது. அப்போது குமாரசாமி விலகி ஓடிவிட்டார். கவினேஷ் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

பெற்றோர் கதறல்

மேலும் வேன் மோதியதில் குமாரசாமியும், வேனில் பயணம் செய்த 6 வாலிபர்களும் படுகாயம் அடைந்தார்கள். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனே காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டிவந்த சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவன் கவினேசின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது அங்கு கூடிநின்றவர்களை கண்கலங்க செய்தது. மேலும் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story