ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், மாவட்ட நிர்வாகம் இன்று முதல் பரிசல் இயக்க மட்டும் அனுமதி அளித்தது.

தர்மபுரி,

கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், காவிரி கரையோரங்களிலும் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்து காணப்பட்டது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 39 நாட்கள் தடைவிதித்து இருந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கி பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை 16 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இன்று முதல் பரிசல் இயக்க மட்டும் அனுமதி அளித்தது. இதனால் ஒகேனக்கலில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அதே சமயம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மற்றும் மெயின் அருவி தடுப்பு கம்பிகள் சேதம் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.


Next Story