ஒரு வாரகால தடைக்குப்பின் மீண்டும் களை கட்டிய திற்பரப்பு அருவி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி:
கடந்த வாரம் மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டி 4500 கன அடி உபரி நீர் வெளியெற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணைக்கட்டிலிருந்து வரும் தண்ணீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஞாயிறு வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச்சென்றனர்.
இந்நிலையில் அருவியில் கடந்த நேற்று தீபாவளி நாளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தீபாவளி நாளில் சுமாரான அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
அருவியின் அனைத்து பகுதிகளிலும் பாறை தெரியாத வகையில் தண்ணீர் பரந்து பாய்கிறது. அருவியில் இருந்து பாயும் வெள்ளத்தில் இருந்து நீர்த்திவலைகள் புகை மண்டலமாய் வெகு தூரத்துக்குத்தெறிக்கிறது.
தற்போது தண்ணீர் அதிகமாக விழும் இருபகுதிகள் சுற்றுபயணிகள் செல்லாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். ஏனைய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து நீச்சல் குளத்தில் நீச்சலடித்து உற்சாகமாய்ச் செல்வதைக் காணமுடிந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை தந்த வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒருவார தடைக்குப்பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதி கடைகளிலும் வியாபாரம் நன்கு நடந்தது.