திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குலசேகரம்:
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மறுகால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. உபரிநீரானது கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக பாய்ந்தது.
இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த திங்கட்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
குளிக்க அனுமதி
இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் பாய்ந்தது.
இதையடுத்து திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.