அரிக்கொம்பன் காட்டு யானை தஞ்சம்; மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
‘அரிக்கொம்பன்' காட்டுயானை தஞ்சம் அடைந்துள்ளதால் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் தங்கியவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
'அரிக்கொம்பன்' காட்டுயானை தஞ்சம் அடைந்துள்ளதால் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் தங்கியவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
'அரிக்கொம்பன்' காட்டுயானை
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டுயானை கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த காட்டு யானை 8 பேரை கொன்றதுடன், ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்து வந்தது.
இந்த காட்டு யானை கடந்த வாரம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விடப்பட்டது.
வீட்டுக்கதவு உடைப்பு
தமிழக-கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடும் முன்பு அதன் கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த யானை மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தது.
மூணாறில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் மற்றும் தட்பவெட்ப சூழல் போன்றே, ஹைவேவிஸ் மலைப்பகுதியும் திகழ்வதால் கடந்த 3 நாட்களாக அந்த யானை இந்த மலைப்பகுதியிலேயே உலா வருகிறது. கடந்த 4-ந்தேதி இரவங்கலாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளி கருப்பசாமி என்பவரின் வீட்டின் கதவை இந்த யானை உடைத்தது. பின்னர் வாசல் வழியாக தும்பிக்கையை விட்டு வீட்டுக்குள் இருந்த அரிசி மூட்டையை இழுத்து தின்றதாக கூறப்படுகிறது. பின்னர் இந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து இந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினரை துரத்தியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த யானை ஹைவேவிஸ் குடியிருப்பு பகுதியின் அருகில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் யானை இருக்கும் இடம் நோக்கி வனச்சரகர் சிவாஜி தலைமையில் வனத்துறையினர் ஒரு ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.
வனத்துறைக்கு சொந்தமான கண்ணாடி பங்களா அருகில் வனத்துறையின் ஜீப் சென்றது. அப்போது எதிரே அரிக்கொம்பன் காட்டு யானை வந்தது. வனத்துறையினரை பார்த்ததும் அந்த யானை அவர்களை நோக்கி ஓடி வந்தது. இதனால் வனத்துறையினர் ஜீப்பை திருப்பி வனப்பகுதியை நோக்கிச் சென்றனர். யானை விடாமல் ஜீப்பை பின்தொடர்ந்து சிறிது தூரம் ஓடி வந்தது. அதன்பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதுகுறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் நேற்று காலை ஹைவேவிஸ் பகுதிக்கு வந்து யானையின் கண்காணிப்பு பணிகள் குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். இரவில் கூடுதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை வந்தால் அதை வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுரை வழங்கினார்.
இதற்கிடையே, கேரளாவில் இருந்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானை மீண்டும் கேரள பகுதிக்கு செல்லாமல் மேகமலை, ஹைவேவிஸ் பகுதியிலேயே உலா வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வருவதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். தங்கும் விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளையும் வெளியேற அறிவுறுத்தினர். அதன்பேரில் தங்கும் விடுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.
அச்சத்தில் மக்கள்
இதேபோல், சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ், மேகமலைக்கு செல்லும் வாகனங்களை தென்பழனி சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்கலாம் என்று மேகமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இரவில் மட்டும் குடியிருப்புகளை தேடி யானை வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கண்காணிப்பில் சிக்கல்
இதற்கிடையே அரிக்கொம்பன் காட்டு யானையின் கண்காணிப்பு குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரிக்கொம்பன் காட்டு யானையின் கழுத்தில் இருக்கும் ரேடியோ காலர் கண்காணிப்பு கருவியின் தகவல்களை கேரள வனத்துறையினர் அறியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக வனத்துறையினருக்கு அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் குறித்து அறிய முடியவில்லை. தமிழக வனத்துறையினர் யானை எங்கு இருக்கிறது என்று வனத்துறையினர் தீவிரமாக தேடும் சூழல் உள்ளது. மேலும் யானையின் நடமாட்டம் குறித்த தகவலை தருவதற்கு கேரள வனத்துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் காட்டு யானையின் இருப்பிடம் குறித்து கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.