செல்பி மோகத்தால் ஆபத்தான பகுதிகளில் தடையைமீறும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்ைக எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


செல்பி மோகத்தால் ஆபத்தான பகுதிகளில் தடையைமீறும் சுற்றுலா பயணிகள்-உரிய நடவடிக்ைக எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில், புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் மோகத்தில் சுற்றுலா பயணிகள் தடையைமீறி ஆபத்தான பகுதிக்கு சென்று வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில், புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கும் மோகத்தில் சுற்றுலா பயணிகள் தடையைமீறி ஆபத்தான பகுதிக்கு சென்று வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புகைப்படம், செல்பி

கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சிமுனை, உயிலட்டி நீர்வீழ்ச்சி மற்றும் கோம்ஸ் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்கள் போதுமான பாதுகாப்பு இல்லாத சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகிறது. இதில் அரவேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை தொலைவில் இருந்து கண்டு களிப்பதற்காக கண்காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சியை காண்பதுடன் மேட்டுப்பாளையம், தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளை மட்டுமின்றி குன்னூர் பகுதியில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனையையும் கண்டுகளிக்க முடியும். இந்த காட்சி முனை கோபுரம் பகுதியில் பாதுகாப்பு தடுப்புக் குழாய்கள் அமைக்கப்பட்டு இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் தடுப்புகளை தாண்டிச் சென்று பாறைகளின் விளிம்பில் நின்று ஆபத்தான முறையில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.

மது அருந்திவிட்டு

இதேபோல் இந்த அருவிக்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள துணை அருவிக்கு செல்லும் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள சுழல்களில் சிக்கி ஏராளமான இளைஞர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் கோடநாடு காட்சி முனைப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமவெளிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாறை விளிம்பில் நின்று புகைப்படம் எடுக்க முயன்ற போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரைக் காப்பாற்ற பள்ளத்தில் குதித்த அவரது கணவரின் கை எலும்பில் முறிவு ஏற்பட்டு இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கண்காணிப்பு பணி

மேலும் கோத்தகிரி பகுதியில் உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி, சுண்டட்டி கோம்ஸ் நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை போதுமான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இந்த அருவிகளில் குளிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பாறைகளில் வழுக்கி விழுந்து காயமடைவது வாடிக்கையாகி வருகிறது.

எனவே இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு செல்வதைத் தடுக்க ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story