குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் விழுந்த குறைவான தண்ணீரில் குளித்தனர்
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தபோதிலும் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.
தென்காசி:
குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தபோதிலும் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதைத்தொடர்ந்து தினமும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குற்றாலத்திற்கு வந்து குளித்துச் சென்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்தனர்.
நீண்ட வரிசையில்...
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுந்தபோதிலும், நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்று குளிப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி ஆண்களும், பெண்களும் தனித்தனியாக வரிசையில் நின்று குளித்துச் சென்றனர். அருவிக்கரைகளில் ஆண்களை விட பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.