வைகை அணை பூங்காவில் புதிய தரைப்பாலம் அமைக்கப்படுமா?; சுற்றுலா பயணிகள் கோரிக்கை


வைகை அணை பூங்காவில் புதிய தரைப்பாலம் அமைக்கப்படுமா?; சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 May 2023 2:30 AM IST (Updated: 7 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணை பூங்காவில் ஆற்றின் இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் சேதமடைந்ததால் புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

வைகை அணை பூங்காவில் ஆற்றின் இருகரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் சேதமடைந்ததால் புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை அணை பூங்கா

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும் வைகை அணை உள்ளது. இங்குள்ள பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்குள்ள பூங்கா, வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு உள்ளது. அதாவது அணையில் இருந்து வைகை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் வலது கரையிலும், இடது கரையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், வலது கரை பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 2 பூங்காக்களையும் இணைக்கும் வகையில், அதாவது 2 பூங்காக்களுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் நின்றபடி வைகை அணையின் பிரமாண்டத்தையும், அணையின் பிரதான 7 மதகுகளையும், 7 சிறிய மதகுகளையும் பார்த்து ரசிக்கலாம்.

புதிய தரைப்பாலம்

இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்போது அணையின் முன்புள்ள பூங்கா தரைப்பாலத்தின் தடுப்பு கம்பிகளும், தூண்களும் சேதமடைந்தது. இதனால் வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே பூங்கா தரைப்பாலத்தை கடந்து சென்றனர். பின்னர் தரைப்பாலத்தில் சேதமடைந்த தடுப்பு கம்பிகளுக்கு பதிலாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டைகளை வைத்து, கயிற்றால் கட்டியுள்ளனர்.

இருப்பினும் சேதமடைந்த தரைப்பாலத்தால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுதவிர பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story