பிரதமர் மோடி நேரில் வந்து பாராட்டிய பாகன் தம்பதியுடன் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
பிரதமர் மோடி நேரில் வந்து பாராட்டிய பாகன் தம்பதியை முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கூடலூர்
பிரதமர் மோடி நேரில் வந்து பாராட்டிய பாகன் தம்பதியை முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மோடி நேரில் வந்து பாராட்டு
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள குட்டி யானைகள் ரகு, பொம்மியை மையமாக வைத்து தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி மற்றும் குட்டி யானைகள் ரகு, பொம்மி ஆகியோர் மிகவும் பிரசித்தி பெற்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்து குட்டி யானைகள் ரகு, பொம்மியை பார்வையிட்டார். தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார். பின்னர் ஆவண படத்தின் மூலம் புகழ் பெற்ற பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
இதனால் நாடு முழுவதும் முதுமலையில் உள்ள குட்டி யானைகள், பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளி மிகவும் புகழ் பெற்றனர். தொடர்ந்து கோடைகாலத்தை சமாளிக்கும் வகையில் குளுகுளு சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். அப்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குச் சென்று குட்டி யானைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்தித்து வருகின்றனர். மேலும் தங்களது செல்போன்களில் குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதனால் பாகன் தம்பதியினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் பிஸியாகவே இருந்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு அமைப்பினரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.