ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்


ஒகேனக்கல்லில் பரிசல் பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்
x

விடுமுறை தினம் என்பதால் இன்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

பென்னாகரம்,

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,243 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டது.

இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 243 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 28 ஆயிரம் கனஅடிநீர் வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது. இதனால் ஐவர்பாணி, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினம் என்பதால் இன்று சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

தொங்கு பாலத்தில் நின்றவாறு பாறைகளுக்கு இடையே தண்ணீர் விழும் காட்சியை கண்டு கழித்தனர். மெயின் அருவி குளிக்கும் இடம் சேதமானதால் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

வழக்கத்தை விட இன்று கூட்டம் ஒகேனக்கல்லில் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனையும், களைகட்டியது. காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதி அளிக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காவிரி கரையோரம் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் போலீசார், வருவாய்த்துறையினர் காவிரி கரையோரம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story