கல்வராயன்மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கல்வராயன்மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான கல்வராயன்மலை அடர்ந்த வனப்பகுதியாகும். மலையின் மேல் வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள் பச்சைப்பட்டு விரித்தாற்போன்று மிகவும் ரம்மியமாக காட்சி அளிப்பதை காண கண்கோடி வேண்டும். மேலும் இங்கு கவியம், மேகம், பெரியார் என 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறுவர்களை மகிழ்விக்க சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் படகு குழாம் ஆகிய பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. இப்படி இயற்கை எழில் மிகுந்து காணப்படும் கல்வராயன்மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பரவலாக மழை
ஆனால் கடந்த சில மாதங்களாக இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கல்வராயன் மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கல்வராயன்மலையில் பரவலாக மழை பெய்ததால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதையறிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கல்வராயன் மலையில் குவிந்தனர். நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகையும் அதிரித்து காணப்பட்டது.
குளித்து மகிழ்ந்தனர்
மலையின் இயற்கை அழகை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து பொழுது போக்கினர். சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமியர்கள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கல்வராயன்மலை களை கட்டியது.