கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அணிவகுத்த வாகனங்கள்
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி வார விடுமுறை மற்றும் சுதந்திர தின விடுமுறையையொட்டி கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
காலை முதலே கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். மாலையில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதன் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மலைப்பாதையில் வாகனங்கள் காத்திருந்து ஊர்ந்தபடி சென்றன.
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக செண்பகனூர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, உகார்த்தே நகர் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருப்பதாக போலீசார் கணித்துள்ளனர்.
இடைவிடாமல் பெய்த மழை
இந்தநிலையில் கொடைக்கானல் பகுதியில், கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை முதலே கார்மேக கூட்டம் கொடைக்கானலை ஆக்கிரமித்தது. பகல் 11 மணி அளவில் லேசான சாரலுடன் மழை தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல மழை விஸ்வரூபம் எடுத்து கனமழையாக கொட்டித்தீர்த்தது.
கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதியில் மாலை 3 மணி வரை பல்வேறு இடங்களில் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலும், பொதுமக்கள் வீடுகளிலும் முடங்கினர். மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனிடையே கொட்டும் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்த படியும் வனப்பகுதியில் உள்ள பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலாப்பயணிகள் சிலர் கண்டுகளித்தனர். தொடர்மழை காரணமாக நகரில் உள்ள நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. கொடைக்கானலுக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை மழையினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.