கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

திண்டுக்கல்


வாரவிடுமுறை


சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.


இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.


படகு சவாரி


இதற்கிடையே பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர்ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட நீர்நிலைகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் அங்கு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து பொழுது போக்கினர்.


கொடைக்கானலில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.



Next Story