கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன
வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். அதிலும் வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் ஒருவழி பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பூத்துக்குலுங்கும் பூக்கள்
இதற்கிடையே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதன்படி, பைன்மரக்காடு, பில்லர்ராக், மோயர் பாயிண்ட், குணாகுகை, டால்பின்நோஸ், பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர்.
இதேபோல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு பூத்துக்குலுங்கிய பல்வேறு வண்ண பூக்களை பார்த்து ரசித்தனர். அத்துடன் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.
ரம்ஜான் பண்டிகை, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவை பார்வையிட்டதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீதோஷ்ண சூழல்
மேலும் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதுடன், அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி சீதோஷ்ண சூழலை உருவாக்கியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.