மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகலம்


மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகலம்
x

மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து கடலில் குதூகல குளியல் போட்டனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

கோடைகால பள்ளி விடுமுறையால் மணப்பாடு கடற்கரையில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகலமாக கடலில் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

மணப்பாடு கடற்கரை

திருச்செந்தூர் அருகிலுள்ள மணப்பாடு கடற்கரை தற்போது பள்ளிகளுக்கு கோடை காலவிடுமுறை விடப்பட்டு இருப்பதால் களைகட்டி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து குவிந்து வருகின்றனர்.

கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள மிகஉயரமான மணல்குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவை நாதர்ஆலயம், அதன் பின்புறம் உள்ள கப்பல் ஓட்டிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியானமண்டபம், நாழிக்கிணறு ஆகியவற்றை ரசிக்கின்றனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மீன்வறுவல்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடியும் குதூகலித்து வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக சிலர் கடலில் அவ்வப்போது பிடித்துவரும் மீன்கள், நண்டு, இறால் போன்றவற்றை கடற்கரையில் உடனுக்குடன் வறுத்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வாகனங்களில் மணப்பாடு கடற்கரை வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

உடன்குடி, சாத்தான்குளம், தட்டார்மடம் நாசரேத், ஆழ்வை, திருச்செந்தூர் தினசயன்விளை பகுதியில் உள்ள மக்களும் தினமும் குடும்பத்தினருடன் வந்து மணப்பாடு கடற்கரையில் குவிந்து சுற்றுலா பகுதிகளை ரசிப்பதும், கடலில் நீராடி மகிழ்ந்தும் வருகின்றனர். இதனால் மணப்பாடு கடற்கரை பகுதி களைகட்டியுள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.


Next Story