விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்


விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்
x

விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர்.

சுற்றுலா பயணிகள்

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை சீசன் நிறைவடைந்த போதிலும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

அவர்கள் சூரிய உதயத்தை காண அதிகாலையில் கடற்கரையில் திரண்டனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீண்ட வரிசையில்...

பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக படகில் செல்ல படகுத்துறைக்கு வந்தனர். விடுமுறை நாள் என்பதால் அங்கும் நீண்ட வரிசையில் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடைகளுடன் காத்திருந்தனர். பின்னர் படகில் உற்சாகமாக பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரியில் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story