திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையை கொண்டாட நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

கோடை விடுமுறையை கொண்டாட நேற்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த விடுமுறையை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அதிலும் பலர் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திற்பரப்பு அருவிக்கு வந்தனர். கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரந்து பாயாவிட்டாலும், ஓரளவுக்கு பாய்ந்தது.

ஆனந்த குளியல்

அதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் நீச்சலடித்தனர். பின்னர் பூங்கா மற்றும் அலங்கார நீருற்று ஆகியவற்றையும் அவர்கள் பார்த்து ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சென்றும், செல்பி படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்ததால் அவர்கள் வந்த வாகனங்களால் திற்பரப்பில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த போதிய பணியாட்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் கடும்சிரமத்துக்கு ஆளானார்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டோரம் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தது.

தொட்டி பாலம்

இதே போல் தொட்டி பாலத்திலும் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளில் சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்தனர். தொட்டிபாலம் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story