ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோடை விடுமுறையையொட்டி ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஏற்காடு, மேட்டூர் விளங்கி வருகிறது. இங்கு வார விடுமுறை, பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வார்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இதனால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியதால் சில இடங்கலில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
சாரல் மழை
சீசன் தொடங்கிய நிலையில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு குடும்பத்தினருடன் சென்று, அங்கு பூத்து குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் பக்கோடா காட்சி முனை, ஜென்ஸ் சீட், லேடிஸ் சீட், சேர்வராயன் மலை, ஐந்தினை பூங்கா ஆகியவற்றுக்கும் சென்று மகிழ்ந்தனர். தொடர்ந்து ஏரியில் படகு சவாரி சென்றனர்.
ஏற்காடு பிரதான மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் குப்பனூர் வழியாக ஏற்காடு சென்று, வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக தனியார் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. மேலும் சாலையோர கடைகள், ஓட்டல்களில் விற்பனை களைகட்டியது.
மேட்டூர் அணை
இதேபோல் மேட்டூரிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பூங்காவை சுற்றிப்பார்த்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டனர். சிறுவர்-சிறுமிகள் அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுதை கழித்தனர்.
மேலும் மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தில் இருந்து அணையின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் மேட்டூரில் மீன் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது.