கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக கோபி, சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் தடுப்பணையில் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்ததுடன், அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களையும் வாங்கி உண்டனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி அணைக்கு வந்து உள்ளதாக பொதுப்பணித்துைற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.