ராமேசுவரம் கோவில், அப்துல் கலாம் நினைவிடத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடைகால விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவில் மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
கோடைகால விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவில் மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோடை கால விடுமுறை
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அனைத்து பள்ளிகளிலும் கோடைகால விடுமுறை விடப்பட்டது. கோடைகால விடுமுறை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் கோவிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இவ்வாறு தீர்த்தக் கிணறுகளில் நீராடிய பின்னர் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்கும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
அப்துல்கலாம் நினைவிடம்
இதேபோல் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள கலாமின் அருங்காட்சியகத்தை காணவும் நேற்று ஏராளமான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.
அதுபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி, அரிச்சல் முனை சாலை, கம்பிப்பாடு மற்றும் பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோடைகால விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் நேற்று காலை முதலே கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் இருந்து திட்டக்குடி சந்திப்பு சாலை மற்றும் ராம தீர்த்தம், சீதா தீர்த்தம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன.