குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் வழங்கினால் சிறை தண்டனை


குரங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் தின்பண்டங்கள் வழங்கினால் சிறை தண்டனை
x

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் சிறைதண்டனை வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்கினால் சிறைதண்டனை வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வனவிலங்குகள் சரணாலயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான்கள் உள்ளன. மேலும் குரங்கு, பன்றி,குதிரை, நரி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடாக அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

வனவிலங்கு சரணாலயத்தில் 57 வகையான மரங்களும், 147 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மான்கள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு 57 குளங்கள் உள்ளன.

சுற்றித்திரியும் குரங்குகள்

இதுதவிர 10 குடிநீர் தொட்டிகள், 17 சிமெண்டு தொட்டிகளும் உள்ளன. கோடியக்காடு புகையிலை திடலில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைத்து வனச்சரகத்தில் உள்ள பேரளம் முதல் சவுக்கு பிளாட் வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.சரணாலயத்தில் மான்கள் அதிகம் வசிக்கும் யானை விழுந்தான் பள்ளம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டுமழை நீரை தேக்கி வைக்க குளம் அமைக்கப்பட்டு மான்கள் மற்றும் சிறு விலங்குகள் தண்ணீர் அருந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

சரணாலயத்தின் சாலையோரத்தில் சுற்றித்திரியும் குரங்குகள், சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கொடுக்கும் தின்பண்டங்களை தின்று வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் எப்போதும் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரியும். இதன் காரணமாக வாகனங்கள் மோதி குரங்கள் இறந்துள்ளன.

தின்பண்டங்கள் வழங்கக்கூடாது

இவ்வாறு சுற்றுலா பயணிகள் குரங்களுக்கு தின்பண்டங்கள் அளிப்பதால் அது இயற்கையோடு ஒன்றிவாழ முடியாத நிலை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குரங்குகளுக்கும் யாரும் உணவளிக்க கூடாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோடியக்கரை வன சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது:- திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதிஷ், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோரின் உத்தரவின் பேரில் வனச்சரகத்தில் விலங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

சிறை தண்டனை

24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த சரணாலயத்தில் சுதந்திரமாக வன விலங்குகள் சுற்றித்திரிகின்றன. வனவிலங்குகள் சரணாலயத்தில் சுற்றிதிரியும் குரங்களுக்கு திண்பாண்டம் வழங்க கூடாது.

இதை மீறி வழங்கினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். மான்கள் அதிகம் வசிக்கும் யானை பள்ளம் பகுதியில் வெட்டபட்ட குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது என்றும் மான்களுக்கும் மற்ற வன விலங்குகளுக்கும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு வராது. இவ்வாறு அவர் கூறினார்


Next Story