கோடை விழாவையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி-வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
படகு போட்டி
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும்.
இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. மேலும் சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு நாளை ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி படகு இல்லத்தில் நேற்று படகு போட்டி நடந்தது. ரம்மியமான சூழ்நிலையில் நடந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு
ஆண்கள் இரட்டையர் மற்றும் தம்பதிகள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷாத்-ஆசிப் ஜோடி முதலிடம் பிடித்தது.
இதேபோல் ஊட்டியை சேர்ந்த தேவா-சுபாஷ் ஜோடி 2-ம் இடத்தையும், கோவையை சேர்ந்த திருமூர்த்தி-நிதிஷ் ஜோடி 3-வது இடத்தையும் பிடித்தது.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் (தம்பதியினர் பிரிவு) கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மிருத்துஞ்ஜை-பூர்வை ஜோடி முதலிடம் பிடித்தது. ஒடிசாவை சேர்ந்த நவாஸ், அல்பக்ஹான் ஜோடி 2-ம் இடமும், சென்னையை சேர்ந்த மணி, சுதா தம்பதி 3-வது இடமும் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுலா பிரதேசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் மன மகிழ்ச்சிக்காக இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது குதூகலம் அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.