கோத்தகிரி பகுதியில் அடிக்கடி தென்படும் 'நீலகிரி தார்' வரையாடுகள்-புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
கோத்தகிரி பகுதியில் அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் உள்ள நீலகிரி தார் எனப்படும் வரையாடுகள் அடிக்கடி தென்பட்டு வருகின்றன. இந்த வரையாடுகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் உள்ள நீலகிரி தார் எனப்படும் வரையாடுகள் அடிக்கடி தென்பட்டு வருகின்றன. இந்த வரையாடுகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வரையாடுகள்
தமிழகத்தின் மாநில விலங்கான, 'நீலகிரி தார்' எனப்படும் வரையாடு, 1996-ம் ஆண்டு அழிவு நிலையிலுள்ள வனவிலங்கு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இவை, மேற்கு தொடர்ச்சி மலைகளில், அதிக உயரமுள்ள கரடுமுரடான மலைப்பகுதிகள், மலைச்சரிவுகளை வாழ்விடமாக கொண்டவை. செங்குத்தான மலைமுகடுகளிலும் கூட, லாவகமாக நடந்து சென்று புற்களையும், இலைகளையும் உண்ணக்கூடியவை.
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் வரையாடுகளின் இனப்பெருக்க காலமாகும். இவற்றை முக்குருத்தி பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணலாம்.
சுற்றுலா பயணிகள் ஆர்வம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்ததால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளதுடன், சலையோரங்களிலும் புற்கள் அதிகளவு வளர்ந்து காணப்படுகின்றன. இந்தநிலையில் தற்போது கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மைனலை, பேரார் உள்ளிட்டப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள புற்களை மேய்வதற்காக வரையாடுகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதை அடிக்கடி காண முடிகிறது. மேலும் அவை உணவுக்காக சாலையைக் கடந்து செல்வதுடன், சாலை ஓரங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் இளைப்பாறுகின்றன. வரையாடுகளை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அழிவின் விளிம்பில் இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து வருவதால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.