கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் அவதி
கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 230 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதுதவிர வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருளி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் நண்பகல் 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மிதமான மழை பெய்தது. இடையிடையே பலத்த மழையும், சாரல் மழையுமாக மாறிமாறி பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். இருப்பினும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.