ஊட்டியில் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டியில் நிலவும் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன.
ஊட்டி,
ஊட்டியில் நிலவும் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன.
கடுங்குளிர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி, மஞ்சூர், கூடலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஊட்டி நகரில் மழை பெய்ததால், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். தொடர் மழையால் வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவியது. குளிரை போக்க சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படியும் சுற்றுலா தலங்களை கொட்டும் மழையிலும் கண்டு ரசித்தனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்தனர். பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது. பலத்த மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. படகுகள் அனைத்தம் கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன.
முகப்பு விளக்குகள்
தொடர் மழை காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி முடங்கியது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால், கடும் பனிமூட்டம் நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடர்ந்த வனப்பகுதியையொட்டி மலைப்பாதை உள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றனர். பனிமூட்டம் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து குன்னூருக்கு அரசு பஸ்கள் தாமதமாக வந்தன.
தூய்மை பணி
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வருவாய், தீயணைப்பு துறை உள்பட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவும், பொதுமக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான நிவாரண முகாம்களில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதேபோல் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி தூய்மை பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.