தீபாவளி பண்டிகையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தீபாவளி பண்டிகையையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

சித்தன்னவாசலில் தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய வசதிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர்.

புதுக்கோட்டை

சுற்றுலாதலம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது சித்தன்னவாசல் சுற்றுலா தலம். இங்கு தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

பூங்கா

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலைமீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

படகு குளம்

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்தனர். இந்தநிலையில் 6 படகுகள் இருந்து வந்த நிலையில் தற்போது 4 படகுகள் சேதமடைந்துள்ளது. தற்போது 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்வதற்காக சுற்றுலா பயணிகள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

சில சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறைகளில் அதிக அளவு சித்தன்னவாசலுக்கு சுற்றுலா பயணிகளும், அவர்களுடன் சிறுவர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் சுற்றுலா தலத்தில் உள்ள விளையாட்டு பொருட்களில் அதிக அளவு உடைந்துள்ளதால் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் ஆர்வமுடன் சித்தன்னவாசல் வரும் சிறுவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

நீண்ட வரிசையில் வாகனங்கள்

அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சித்தன்னவாசல் முழுவதும் அதிகமான இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் டிக்கெட் வழங்கும் இடத்தில் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றது.

தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் திருட்டு போன்ற குற்ற செயல் ஏற்படாமல் இருக்க அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உணவு அறை அமைக்கப்படுமா?

காரைக்குடியை சேர்ந்த ஜெயந்தி கூறுகையில், சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை இங்கேயே பொழுதை களிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்றுவிடுகின்றன. நல்ல உணவகம் அமைக்க வேண்டும் அல்லது உணவை அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவுஅறை அமைக்க வேண்டும் என்றார்.

புதிய படகுகளை இயக்க வேண்டும்

கந்தர்வகோட்டைைய சேர்ந்த சாந்தி கூறுகையில், படகு குளத்தில் போதுமான படகுகள் இல்லை. 2 படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கின்றோம். பலர் நேரமாகும் என ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உடைந்து கிடைக்கும் படகுக்கு பதிலாக புதிய படகுகளை இயக்க வேண்டும். இசை நீரூற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருச்சியை சேர்ந்த சிறுவன் ரஞ்சித் கூறுகையில், பூங்காவில் விளையாடுவதற்கு உண்டான விளையாட்டு பொருட்கள் எல்லாம் உடைந்து கிடைக்கிறது. இதனால் எங்களால் விளையாட முடியவில்லை. இன்னும் பல்வேறு விளையாட்டு பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்றார்.


Next Story