பாதுகாப்பு கவசம் அணியாமல் சொகுசு படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள்


பாதுகாப்பு கவசம் அணியாமல் சொகுசு படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து சொகுசு படகில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து சொகுசு படகில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்ைடக்கு 2 அதிநவீன சொகுசு படகுகளில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உல்லாச படகு சவாரியை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். குளுகுளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும், சாதாரண படகில் பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

வட்டக்கோட்டை வரை சென்று மீண்டும் படகு கன்னியாகுமரி திரும்பி வருவதற்கு 1½ மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. கடலில் இருந்தவாறே கன்னியாகுமரி கரையோரத்தில் உள்ள அழகை சுற்றுலா பயணிகள் ரசித்தவாறு படகு பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் படகு சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில்...

அதே நேரம் இந்த படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் யாரும் பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) அணியவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்தில் சிக்கியது. பாதுகாப்பு கவச உடை அணியாததால் 22 பயணிகள் கடலில் மூழ்கி இறந்தனர்.

இந்தநிலையில் 1½ மணி நேரத்திற்கு மேல் படகு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் யாரும் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பயணம் செய்வதும், செல்பி எடுப்பதிலும் அக்கறை காட்டுவதால் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வரும் நிலையில் இந்த ஆபத்தான பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகாரி தகவல்

இதுகுறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு செல்லும் சொகுசு படகு பயணம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வட்டக்கோட்டைக்கு செல்லும் 2 சொகுசு படகிலும் அனைத்து இருக்கைகளிலும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாப்பை மீறி முதல்நாளில் சிலர் அணியாமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தற்போது பாதுகாப்பு கவச உடை அணிந்த பின்னரே சுற்றுலா பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் வட்டக்கோட்டை செல்லும் சொகுசு படகுகள் புறப்பட்டு செல்லும் நேரம், மீண்டும் கன்னியாகுமரி வந்தடையும் நேரம் அடங்கிய அட்டவணை விரைவில் வெளியிடப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.


Next Story