கோடநாடு காட்சி முனையை ரசித்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கோடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
கோத்தகிரி,
தொடர் விடுமுறையையொட்டி கோடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
தொடர் விடுமுறை
கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக கோடநாடு காட்சி முனை உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு வந்து செல்கின்றனர்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் தாழ்வான பகுதியில் உள்ள பவானிசாகர் அணை, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த காட்சிமுனை கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.
கண்டு ரசித்தனர்
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோடநாடு காட்சி முனையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவியதால், கோடநாடு காட்சி முனையில் இருந்து சமவெளி பகுதிகளை பார்க்க முடியவில்லை. இருப்பினும் சமவெளி பகுதியை மூடி காணப்பட்ட மேகக் கூட்டங்களின் அழகை கண்டு களித்து சென்றனர். கடந்த 2 நாட்களாக இதமான காலநிலை நிலவுவதால், காட்சி முனையில் நின்றபடி தொலைநோக்கி மூலம் இயற்கை காட்சிகளை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால், கோத்தகிரி பகுதி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.