குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். அருவிகளில் குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சிலர் சோப்பு, ஷாம்புகளை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துபவர்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் கண்காணித்து அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.39 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டு உள்ளது. எனவே அருவிகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக் கூடாது, துணிகளை துவைக்க கூடாது, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.